விழுப்புரம்: மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மேலும் ஒருவர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
மேலும், முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி(55), மலர்விழி(60) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மண்ணாங்கட்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பத்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்காலிக பணி நீக்கம்: இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் திரு.தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது: இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.