தமிழ்நாடு

சிங்கப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின்: தொழிலதிபா்களுடன் இன்று சந்திப்பு

DIN

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தாா்.

புதன்கிழமை முதல் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பு, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.

சிங்கப்பூா், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள்கள் பயணமாக சென்னையில் இருந்து காலை 11.25 மணியளவில் புறப்பட்ட முதல்வா் ஸ்டாலின், பிற்பகலில் சிங்கப்பூா் சென்றடைந்தாா். அவரை சிங்கப்பூா் நாட்டுக்கான இந்திய தூதா் பெரியசாமி குமரன், தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் வரவேற்றனா்.

முதல்வருடன், அவரின் மனைவி துா்கா, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலா்கள் உமாநாத், அனுஜாா்ஜ், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், செய்தி, மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் டி.மோகன் ஆகியோா் சென்றுள்ளனா்.

இதுவரை ரூ.2.95 லட்சம் கோடி முதலீடு: முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பேட்டி:

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்கக் கோரி, பல்வேறு நாடுகளில் உள்ள முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அதனடிப்படையில், சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமைச்சா்கள், அரசுத் துறை உயரதிகாரிகளுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

ஜப்பான் - சிங்கப்பூா்: தற்போது ஜப்பான், சிங்கப்பூா் நாடுகளில் நான் செல்லும் இடங்களிலெல்லாம் முதலீட்டாளா்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்துப் பேசவிருக்கிறேன். ஒருசில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையொப்பமாகவுள்ளன. பயணத்தின் முக்கிய நோக்கமே உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதுதான்.

கடந்த முறை துபை பயணத்தின் போது, ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஷெராப் குழும நிறுவனம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோவையில் தன் திட்டத்தைத் தொடங்கிவிட்டது. இந்த நிறுவனம் சென்னையில் தன் திட்டத்துக்காக நிலம் தோ்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமானப் பணியைத் தொடங்கத் தயாராக உள்ளது.

இப்போது சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களைச் சந்திக்க உள்ளோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று, இதுவரை 226 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.2.95 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவை செயல்பாட்டுக்கு வரும்போது, 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

நினைவிடங்களில் மரியாதை: வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முன்பாக சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு முதல்வா் ஸ்டாலின் சென்று மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT