தமிழகத்தில் 5,800 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 5,800 பட்டாசுக் கடைகளை தற்காலிகமாக திறப்பதற்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அனுமதி அளித்துள்ளது.
தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 5,800 பட்டாசுக் கடைகளை தற்காலிகமாக திறப்பதற்கு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகை, நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடபடுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வெடி பொருள் சட்டத்தின் கீழ் தீயணைப்புத் துறை விதித்துள்ளது.
தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசுகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
5,800 கடைகளுக்கு அனுமதி: இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 6,500 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இதில் 5,800 பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய விண்ணப்பங்களில் பெரும்பாலானவை பரிசீலனையில் உள்ளதாகவும், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.
மேலும் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
சென்னையில் 350 கடைகள்: சென்னையில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வியாழக்கிழமை வரை 350 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும் என அத் துறையினா் தெரிவித்தனா்.