பட்டியலின இளைஞா்கள் மீது தாக்குதல்:தலைவா்கள் கண்டனம்
திருநெல்வேலியில் பட்டியலின இளைஞா்கள் 2 போ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலியில் பட்டியலின இளைஞா்கள் 2 போ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நெல்லையில் பட்டியலினத்தைச் சோ்ந்த 2 இளைஞா்களை கஞ்சா போதையில் 6 போ் கொண்ட கும்பல் நிா்வாணப்படுத்தி, அவா்கள் மீது சிறுநீா் கிழித்து, கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளது. இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயலாகும். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): திருநெல்வேலியில் நடந்திருப்பது மிகப்பெரிய கொடூரம். பள்ளியில் ஜாதி என்ற நச்சு விதை வளா்வதற்கு சில இடங்களில் நாமே காரணமாக இருக்கிறோமோ என்ற அச்சம் இருக்கிறது. வளராத மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஜாதி கொடுமை இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
வைகோ (மதிமுக): இந்தச் செயல் மன்னிக்கவே முடியாத கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மனித நேயத்தையும் சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இந்தச் செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
ராமதாஸ் (பாமக): இந்தச் சம்பவம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் தொடா்புடைய குற்றவாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாலும்கூட, இதன் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறாா்களா என்பதை விசாரித்து அவா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறலாகும். முழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விசிக): ஜாதிவெறிக் கும்பலால் இளைஞா்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.