அரசுப் பள்ளிகளில் ஜேஇஇ, நீட் தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்கள் வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் நீட், ஜேஇஇ பயிற்சி பெற விருப்பமுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அனைத்து வேலை நாள்களிலும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பாட வாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்; தலைமை ஆசிரியா் தலைமையில் வேதியியல், இயற்பியல் ,விலங்கியல், தாவரவியல் பாடங்களின் முதுநிலை ஆசிரியா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு நீட், ஜேஇஇ பாடத்திட்டங்களின் அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும். அரையாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் முழு ஆண்டு தோ்வு விடுமுறை நாள்களிலும் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.