அரசுப் பேருந்தின் படிக்கெட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் போரூரிலிருந்து முகலிவாக்கம் செல்லும் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவர்கள் பேருந்துக் கூரையின் மேல் ஏறியும் தொங்கிக் கொண்டும் படியில் நின்றுகொண்டு ஆபத்தான முறையிலும் பயணம் செய்துள்ளனர். இதனைக் கண்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்.
அத்துடன் அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது. மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் நடிகை ரஞ்சனா நாச்சியாரை மாங்காடு காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்களுக்கு காலை, மாலை ரஞ்சனா கையெழுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.