புதுவை முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவு: முதல்வர்கள் ஸ்டாலின், ரங்கசாமி இரங்கல்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு முதல்வர்கள் ஸ்டாலின், ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவுக்கு முதல்வர்கள் ஸ்டாலின், ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் - அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளவயது முதல் பணியாற்றிய கண்ணன், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி முதல்வர் ரங்காமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், புதுச்சேரி மக்களின் நலனுக்காக, மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கண்ணன். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.