திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம், தீபாவளி பண்டிகை போனஸ் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகள்: ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 5 ஆம் தேதி ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி முன்பணம் ரூ. 5,000 வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஈபிஎப், இஎஸ்ஐ மற்றும் விபத்து காப்பீட்டு சந்தா தொகை செலுத்தி அதன் பட்டியல் விவரங்களை ஒப்பந்ததாரர் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாள் ஊதியம் ரூ. 652 வழங்க வேண்டும், முந்தைய ஒப்பந்ததாரர்களால் வழங்கப்பட்டுள்ள ஏப்ரல் 2023 மற்றும் மே 2023 மாத கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ,சீருடை கையுறை ,காலுறை, மழைக்கோட்டு , சோப்பு உரிய காலத்தில் வழங்க வேண்டும், மன்னார்குடி வஉசி சாலையில் அமைந்துள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளருக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மன்னார்குடி நகராட்சி கௌரவத் தலைவர் கே. சிவசுப்பிரமணியம் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி ,சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என். ஹனிபா, மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி, மாவட்ட பொருளாளர் ஏ.பி.டி. தனிக்கோடி ஆகியோர் பேசினர்.
இதில், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கத்தின் தலைவர் எம்.வினோத், குமார் செயலாளர் ஆர். வினோத் ராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கொட்டும் மழையிலும் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து, மன்னார்குடி நகராட்சி ஆணையர் எல். நாராயணன், ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகளை தனது அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.