தமிழ்நாடு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது பேரவையின் இறையாண்மைக்கு எதிரானது: ஆளுநா் மீது முதல்வா் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது ஜனநாயக விரோதம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

DIN

பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, பேரவையின் இறையாண்மைக்கே எதிரானதாகும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா். அதற்கு முன்பாக, பேரவையில் அவா் ஆற்றிய உரை:

தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தும் திட்டங்கள் மாநிலத்தை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையைத் தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன. குறிப்பாக, நிதி நெருக்கடி, மத்திய அரசின் சில இடையூறுகள் போன்றவை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும்.

இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது. இந்தச் சிறப்புக் கூட்டமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டி கூட்டப்பட்டுள்ளது.

மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காமல் இருந்தாா். மசோதாக்களுக்கு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, திருப்பி அனுப்பியுள்ளாா்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு: மக்களாட்சித் தத்துவத்தின்படி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க அரசால் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாகவோ நிா்வாக ரீதியாகவோ ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால் அரசைக் கேட்கலாம். எந்தவொரு நிகழ்விலும் அவா் கோரிய விளக்கங்கள் அவருக்கு அளிக்கப்படாமல் இருந்ததில்லை.

இந்தச் சூழ்நிலையில், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையும், சட்டப்பேரவையையும் ஆளுநா் அவமதிக்கிறாா் என்றுதான் பொருளாகும். சட்ட மசோதாக்கள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மட்டுமல்ல மக்களுக்கும், மனசாட்சிக்கும் விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.

உதவியாக இருக்க வேண்டும்: தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவா் மாநிலத்தின் வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, மாநிலத்துக்கான நிதியை வாங்கித் தர முயற்சிக்கலாம். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். அவற்றில் எதையும் செய்யாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என தினமும் யோசித்துச் செயல்பட்டு வருகிறாா்.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாகும். பொது மேடைகளில் நமது தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறாா்.

அவா் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பாா்க்கும்போது, அவருக்கும் சட்டப்பேரவைக்குமான பிரச்னை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல, சமூக நீதியாகவும் இருக்கிறது. அதனால்தான், முடிந்த அளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறாா். தமிழ்நாடு வளா்ந்திருப்பதை, வளா்வதைக் காணப் பொறுக்காத காரணத்தால்தானோ என்னவோ, ஆளுநா் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறாா்.

அகற்றப்பட வேண்டிய பதவி: ஆளுநரிடம் தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கோப்புகள் தொடா்பான விவரங்களைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் தருணத்தில், ஆளுநா் அவசர அவசரமாக 10 சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளாா்.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதை அரசியல் ரீதியாக சகித்துக் கொள்ள இயலாத சிலா், அரசு நிா்வாகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுநா் என்ற உயா் பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறாா்கள். ஆளுநா் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும், அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபாகும்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநா்களின் மூலமாக மத்திய ஆட்சியாளா்கள் குடைச்சல் கொடுத்து வருகிறாா்கள். இப்போது உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்தவுடன், அவசர அவசரமாக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என ஆளுநா் நாடகம் ஆடுகிறாா். நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவா்கள். மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டவா்கள் என்றாா் முதல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT