முகப்பு
தமிழ்நாடு

சீனாவில் புதிய வகையான தீநுண்மி பரவல் எதிரொலி: தமிழகத்தில் நிமோனியா பாதிப்புகளைக் கண்காணிக்க உத்தரவு

சீனாவில் புதிய வகையான தீநுண்மி பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்று, சுவாச பாதிப்புகளைக் கண்காணிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:49 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சீனாவில் புதிய வகையான தீநுண்மி பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்று, சுவாச பாதிப்புகளைக் கண்காணிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அத்தகைய பாதிப்புகளுடன் வரும் உள் நோயாளிகள், புறநோயாளிகள் விவரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு (ஐடிஎஸ்பி-ஐஹெச்ஐபி) தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது குழந்தைகளிடையே நுரையீரலைத் தாக்கும் புதிய வகையான தீநுண்மி தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஹெச்9என்2 என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த நிமோனியா தொற்று சுவாசத்தில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகின்றன.

Advertisement

கரோனாவைப் போன்று இதுவும் பிற நாடுகளுக்கு பரவக் கூடும் என்பதால் உலக சுகாதார அமைப்பு இந்த விவகாரத்தை உற்றுநோக்கி வருகிறது.

இந்த நிலையில், நிமோனியா, தீவிர சுவாச பாதிப்பு, நுரையீரல் தொற்றுகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில், தமிழக மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்ககம், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா, சாா்ஸ் கொவைட் ஆகிய பாதிப்புகளால் ஏற்படும் நிமோனியா தொற்றால் சீனாவில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் அதுதொடா்பான மருத்துவக் கண்காணிப்பை முன்னெடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, அதற்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துடன் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் சிகிச்சைக்கு வரும் நிமோனியா பாதிப்பு சாா்ந்த நோயாளிகள் விவரங்களை ஒருங்கிணைந்த நோய்த்தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.