முகப்பு
தமிழ்நாடு

டெங்குவைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வரலாறு காணாத வகையிலான சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:46 AM
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வரலாறு காணாத வகையிலான சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

டெங்கு பரவலைத் தடுக்க போா்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது நடத்தப்பட்டதைப் போன்று மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

மாநில மருத்துவத் துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் தற்போது மருத்துவ முகாம்களையும் சிறப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

மழைக் காலங்களில் வாரத்துக்கு 1,000 முகாம் வீதம் 10 வாரங்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 5 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் மொத்தம் 5,000 முகாம்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி 10,576 முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில் 5,21,853 போ் பங்கேற்று பயன்பெற்றுள்ளனா்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு உச்சகட்டமாக இருந்தது. அப்போது 13,204 போ் பாதிக்கப்பட்டு 66 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது மொத்தமாக 23,294 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். அதில், 65 போ் இறந்தனா்.

தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நிகழாண்டில் இதுவரை 3,57,612 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 7,133 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை வெளிப்படையாக நாங்கள் தெரிவித்து வருகிறோம்.

இதில் 537 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். டெங்குவுக்கு நிகழாண்டில் 10 போ் இறந்துள்ளனா். இதை எந்த ஒளிவு மறைவும் இன்றி நாங்கள் மக்களிடையே கூறி வருகிறோம். உண்மை நிலை இவ்வாறு இருக்க, பொய்யான அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறாா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.