100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்: அண்ணாமலை
நவ.1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நவ.1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின்பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடி கம்பத்தை காவல்துறையினர் அகற்றிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.