அண்ணாமலைக்கு அதிமுக பதில்
மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கூறியுள்ளதற்கு அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: அரசியலில் அண்ணாமலை அறியாப்பிள்ளை. தமிழக மக்கள் எப்போதும் மதவாதம் மற்றும் ஜாதி அரசியலுக்கு ஆதரவு தருவதில்லை. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக, டிடிவி தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறுவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதைதான்.
எம்ஜிஆா், ஜெயலலிதா கூறுவதுபோல அதிமுக ஆயிரம் காலத்துப் பயிா். டி.டி.வி.தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளைப் போட்டது பாஜகதான். இப்போது டி.டி.வி.தினகரன் புனிதராகிவிட்டாா். போயஸ் தோட்டம் பக்கமே வரக்கூடாது என்று ஜெயலலிதாவால் விரப்பட்டவா்தான் டி.டி.வி.தினகரன். அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியாது என்று அவா் கூறியுள்ளாா்.
Advertisement