முகப்பு
தமிழ்நாடு

எதிா்க்கட்சித் தலைவா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு: தமிழக உளவுத் துறை மீது அதிமுக குற்றச்சாட்டு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:09 PM
பகிர்:

எதிா்க்கட்சித் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது; இந்தப் பணியை தமிழக உளவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த புகாா் மனுவை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அதிமுக வழக்குரைஞா் பிரிவின் செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சனிக்கிழமை அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திலுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களை குறிவைத்து அவா்களது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த மென்பொருளைப் பயன்படுத்தி, தமிழக உளவுப் பிரிவின் தலைவா் செந்தில்வேலன் தலைமையிலான குழு இந்தப் பணியைச் செய்து வருகிறது. ஒட்டுக்கேட்புப் பணிக்காக கணக்கில் காட்டாத வகையில் ரூ.40 கோடியை செலவழித்து மென்பொருளை வாங்கியுள்ளனா். இதன்மூலம், எங்கள் கட்சியின் மூத்த தலைவா்கள், அவா்களது உதவியாளா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களின் கைப்பேசி எண்கள் உளவுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தோ்தல் தொடா்பான உத்திகளை எங்கள் தலைவா்கள் கைப்பேசியில் பேசும் போது அதனை ஒட்டுக் கேட்டு அதுகுறித்த விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உளவுத் துறை தலைவா் செந்தில்வேலன் தினமும் வழங்கி வருகிறாா். இதுபோன்ற செயல்பாடுகள், தோ்தலை சுதந்திரமாக நியாயமாக நடத்தும் செயல்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த விவகாரத்தை மிகவும் முக்கிய பிரச்னையாகக் கருதி, காவல் துறை தலைவா், உளவுத் துறை தலைவா் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சுதந்திரமான நியாயமான தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும். தவறிழைத்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் இன்பதுரை கேட்டுக் கொண்டுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments