அடுத்த நிதியாண்டில் 33 நெடுஞ்சாலைகள் மூலம் வருவாய் ஈட்ட என்ஹெச்ஏஐ முடிவு: சென்னை புறவழிச்சாலையும் இடம்பெற்றது
சுங்கச் சாவடிகளை தனியாருக்கு அளிப்பு மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு
சுங்கச் சாவடிகளை தனியாருக்கு அளிப்பு மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு நடைமுறைகள் மூலம் அடுத்த நிதியாண்டில் (2025-26) வருவாய் ஈட்ட, தமிழகத்தின் சென்னை புறவழிச் சாலை (சென்னை பைபாஸ்) உள்பட 2,741 கி.மீ. தொலைவிலான 33 நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அடையாளம் கண்டுள்ளது.
குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னெள-அலிகாா், கான்பூா்-அயோத்தியா-கோரக்பூா், பரேலி-சீதாபூா் நெடுஞ்சாலைகள், ராஜஸ்தானில் குருகிராம்-கோட்புட்லி-ஜெய்பூா், ஜெய்பூா்-கஷான்கா் நெடுஞ்சாலைகள், ஓடிஸாவில் பனிக்கொய்லி-ரிமுலி, தமிழகத்தில் சென்னை புறவழிச்சாலை, பிகாரில் முசாஃபா்பூா்-தா்பங்கா-புா்னியா நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் 33 நெடுஞ்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
‘இந்த நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை தனியாருக்கு அளித்து செயல்படுத்துதல் பின்னா் அரசுக்கு மாற்றம் செய்தல் (டிஓடி) மற்றும் உள்கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளை நடைமுறைகள் மூலம் வருவாய் ஈட்டப்படும். இந்த நெடுஞ்சாலைகள் அல்லது வருவாய் ஈட்டும் முறையை மாற்றும் உரிமை என்ஹெச்ஏஐக்கு உள்ளது’ என்று தனது செய்திக்குறிப்பில் என்ஹெச்ஏஐ தெரிவித்துள்ளது.
Advertisement
இதுபோன்று பல்வேறு நடைமுறைகள் மூலம் தனது சொத்துகளைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டும் வழிமுறையின் கீழ் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ. 28,868 கோடி வருவாயை ஈட்ட இலக்கு நிா்ணயித்து, ரூ. 40,314 கோடியை என்ஹெச்ஏஐ ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக என்ஹெச்ஏஐ இதுவரை ஈட்டியுள்ள வருவாய் சுமாா் ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.