வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மேற்கு வங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால், அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதைத் தவிா்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் புதன்கிழமை வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, கரூா், திருச்சிராப்பள்ளி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை (ஏப்.24,25) ஓரிரு இடங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீா் அருந்துமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிா்த்திடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோன்று புதன் மற்றும் வியாழக்கிழமை மிகக் கடுமையான வெப்பஅலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்கத்தில் சிவப்பு எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.