சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
“திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 65,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தால் நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.
பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
1. குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
2. முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் படை வீரர்கள் வங்கிகளில் ரூ ஒரு கோடி வரை கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படும்.
3. தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு.
4. வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.