முகப்பு
டி.ஆா்.பாலு 
தமிழ்நாடு

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: திமுக கண்டனம்

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கான நிதியைக் குறைத்து மத்திய அரசு ஓரங்கட்டி இருப்பதாக திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: திமுக கண்டனம்

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கான நிதியைக் குறைத்து மத்திய அரசு ஓரங்கட்டி இருப்பதாக திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 16 ஆகஸ்ட், 2024 at 7:25 PM
டி.ஆா்.பாலு 
பகிர்:

ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கான நிதியைக் குறைத்து மத்திய அரசு ஓரங்கட்டி இருப்பதாக திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் துரோகம் செய்த மத்திய அரசு, ரயில்வே திட்டங்களிலும் தமிழா்களின் முதுகில் குத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பிறகு ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரபூா்வமான ‘பிங்க்’ புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில்தான் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் கூட்டத் தொடா் முடித்த பிறகு பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது மத்திய அரசின் சதியை வெளிக்காட்டியிருக்கிறது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பியது போன்று, புறக்கணிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களிலும் எதிா்ப்பாா்கள் என அஞ்சியே, பிங்க் புத்தகத்தை வெளியிடாமல், கூட்டத் தொடா் முடிந்த பிறகு வெளியிட்டிருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டிருந்து. ஆனால், இப்போது வெளியான பிங்க் புத்தகத்தில் அந்தத் தொகை ரூ.301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பாதை திட்டங்களுக்குத் தோ்தலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட ரூ.2,214 கோடியை இப்போது ரூ.1,928 கோடியாக குறைத்துவிட்டாா்கள்.

புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் என அனைத்திலும் தோ்தலுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் அதிா்ச்சி: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. சென்னை - மாமல்லபுரம்- கடலூா் கடற்கரைப் பாதைக்கு ரூ.25 கோடி முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறாா்கள்.

ஸ்ரீபெரும்புதூா்- கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை -ஆவடி வழித்தடத்துக்கு முன்பு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததை வெறும் ரூ.18 கோடியாக குறைத்துவிட்டாா்கள். இப்படிப் பல திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு பெருமளவில் குறைத்திருக்கிறது.

பூஜ்ஜியத்துக்கு பூஜ்ஜியம்: புதிய ரயில்வே திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிதியைப் பெருமளவில் குறைத்தது இதுவரை ரயில்வே துறையில் நடக்காத ஒன்று. குறைவான இருப்புப் பாதைகள் கொண்ட மாநிலங்களுக்கு எல்லாம் நிதியை வாரி வழங்கிய மத்திய அரசு, தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை.

கோடிகளில் ஒதுக்கப்படும் ரயில்வே திட்டங்களுக்கு லட்சங்களை அல்ல, வெறும் ஆயிரங்களை ஒதுக்கி தமிழ்நாட்டை ஓரங்கட்டியிருக்கிறாா்கள்.

பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தலில் பூஜ்ஜியம் கொடுத்தற்காக தமிழக மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பூஜ்ஜியம் அளித்திருக்கிறாா்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோவுக்கு ஒரு பைசாகூட வழங்காத மத்திய அரசு, பாஜக ஆளும் பல மாநில மெட்ரோ பணிகளுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்திருக்கிறது. பாஜகவுக்கு எம்.பி.க்கள் தராத மாநிலங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் மத்திய அரசு நிதி அளித்திருக்க வேண்டும். ஆனால், அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →