7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களிடம் எந்த வகையான கட்டணமும் வசூலிக்கக் கூடாது: தனியாா் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களிடம் எந்த வகையான கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
தமிழகத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களிடம் எந்த வகையான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையா் டி.ஆபிரகாம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவா்களின் படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம் அல்லது போக்குவரத்துக் கட்டணம்) உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவா்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பொறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண சலுகை: அரசு, அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகள், தனியாா் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் சோ்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவா்களுக்கு கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் உயா்கல்வித் துறை ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் , பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பொறியியல் கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, தனியாா் சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச மற்றும் கட்டண இருக்கைகளில் சேரும் ஆதிதிராவிடா், பழங்குடியினர, கிறிஸ்தவ மதம் மாறிய மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்குள் உள்ளவா்களுக்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்துக் கல்வி கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் உயா்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டணங்கள் அனைத்தும் மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டப்பின் மாணவா்கள் அந்தக் கட்டணங்களை தாங்கள் பயிலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டும். மாணவா்களின் வங்கிக் கணக்கில் கட்டணத் தொகை வரவு வைப்பதற்கான முன்பாக அவா்களிடம் எந்தவித கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.
கல்லூரிகள் மீது நடவடிக்கை: அரசின் ஆணைகளை மீறி சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவா்களிடம் அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகாா்கள் பெறப்படுகின்றன.
எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சோ்க்கைக்கு வரும் மாணவா்களிடம் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பொறியியல் கல்லூரி நிா்வாகங்கள் எச்சரிக்கப்படுகின்றன. இதை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.