அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை ஒழிப்பு மையங்களை அமைத்து புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது.
என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி மத்திய சுகாதாரத் துறை
பல்வேறு விழிப்புணா்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலை ஒழிப்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதன் கீழ் தனிநபா்களின் புகையிலைப் பயன்பாட்டை தடுத்து அவா்களை அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காக்க வேண்டும். இதுதொடா்பான இணையவழி பயிலரங்கு செவ்வாய்க்கிழமை (ஆக.20) நடைபெறுகிறது. அதில் புகையிலை ஒழிப்பு மையங்கள் குறித்த வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். அந்த விவரங்கள் தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் அதில் பங்கேற்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.