முகப்பு
தமிழ்நாடு

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 11:14 PM
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
பகிர்:

மதுரை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டம் பாராட்டுக்குரியது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு:

பிளஸ் 2 படித்த சிறுமியான எனது மகளை கடந்த மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவகங்கை மாவட்ட காவல் துறையினர், காணாமல்போன மாணவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை, நண்பர்களுடன் தங்கியிருந்தேன், எனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என அந்த மாணவி தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட மாணவி, மதுரையில் தங்கி பாதுகாப்புடன் கல்வி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் செந்தில்குமார் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு குற்றவியல் வழக்குரைஞர் செந்தில்குமார் முன்னிலையாகி, மாணவியை மதுரையில் உள்ள அரசு பாலர் இல்லம் குழந்தைகள் நலக் காப்பகம் சார்பில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறுமியை மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மாணவிக்கு உடனடியாக பாதுகாப்பான இடமும், கல்வியும் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட அரசு வழக்குரைஞரின் செயல் சிறப்பானது. ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், மாணவிகள் பயனடையும் வகையில், குழந்தைகள் நலன், சிறப்பு சேவை துறையானது அவர்களுக்கு உணவு, உடை, சீருடை, கல்வி என அனைத்தும் வழங்கி வருகிறது.

தமிழக அரசின் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியது. அதேநேரம், மாணவிக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்ததுடன், மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவரது பெற்றோருக்கு உரிய சட்ட ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனர் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →