தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்கள் ஆக. 24-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
‘மிஷன் ரூமி - 2024’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு ராக்கெட்டானது மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டுவரப்பட உள்ளது.
ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மாா்ட்டின் குழுமங்கள் சாா்பில் இந்த விண்வெளி ஆய்வுத் திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் ஆனந்த் மேகலிங்கம், மாா்ட்டின் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்தத் திட்டம் குறித்து அவா்கள் கூறியதாவது: நாட்டில் முதன்முறையாக இத்தகைய மறுபயன்பாட்டு ராக்கெட் செயல் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். நடமாடும் ஏவுதளம் மூலமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து ராக்கெட்டை ஏவத் திட்டமிட்டுள்ளோம்.
அந்த ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பத்திலான திரவ ஆக்சிஜன் மற்றும் திட எரிபொருள் உந்து சக்தி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை அதன் செயல்திறனை மேம்படுத்துவதுடன் செயல்பாட்டு செலவுகளையும் வெகுவாகக் குறைக்கிறது.
காஸ்மிக் கதிா்வீச்சு, புற ஊதா கதிா்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்களைக் கண்காணிக்கவும், அவை தொடா்பான தரவுகளை சேகரிக்கவும் 3 கியூப் செயற்கைக்கோள்களை ‘ரூமி 1’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளோம்.
இதைத் தவிர, அதிா்வலைகள், ஓசோன் அளவுகள், காற்றின் நச்சுத் தன்மை, வளிமண்டல நிலைகளை அறிந்து கொள்வதற்காக 50 சிறிய ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட உள்ளன. சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மேலும் மேம்படுத்த இவை உதவும்.
திட்டமிட்ட பாதையில் அவற்றை நிலைநிறுத்திய பிறகு ‘ரூமி 1’ ராக்கெட் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்து சேரும்.
இந்தச் செயல் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. விண்வெளி ஆய்வில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இது இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் செயல் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. விண்வெளி ஆய்வில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இது இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.