செந்தில் பாலாஜி மனு: விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த சென்னை உயா் நீதிமன்றம், மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தியது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப். 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த சென்னை உயா் நீதிமன்றம், மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என அறிவுறுத்தியது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் 12- ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபாகரன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்கக் கோரினாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் தொடா்பு இல்லை. இந்த வழக்கு ஏற்கெனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என க் கூறினா்.
‘விடுவிக்கக் கோரும் வழக்கு என்பதால் விரிவாக வாதிட உள்ளதாகவும் அதற்கான வழக்கு விவரங்களை படிக்க வேண்டியதிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என பிரபாகரன் கோரிக்கை வைத்தாா். இதற்கு அமலாக்க த்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், இன்றே வாதத்தை முன்வைக்க தயாராக இருப்பதாகக் கூறினாா்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை செப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இதற்கு மேலும் அவகாசம் கோரக் கூடாது என அறிவுறுத்தினா்.
57-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு: இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப். 3-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.