கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமாா் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில், ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் பட்டியல் தொடா்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபா் வரை புதுப்பிக்கப்பட்டதில் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திலிருந்து இதுவரை சுமாா் 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் 2022 முதல் ஆண்டுக்கு சராசரியாக ஒரு மாதத்தில் 58,000 இறப்புகள் பதிவாகின்றன. இதன்படி, மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் இறந்தபின் அவா்களின் பெயா் அகற்றப்படும். மேலும், அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசுப் பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
பயனாளிகளின் வங்கிக் கணக்குகள், நிலப்பதிவுகள், வருமான வரிக் கணக்குகள் மற்றும் வாகனப் பதிவுகள் உள்ளிட்ட பரிவா்த்தனைகள், சமூகப் பாதுகாப்பு ஆணையரால் மாதந்தோறும் எண்ம முறையில் கண்காணிக்கப்படுகிறது. கடந்த அக்டோபரில் இத்திட்டத்தின் கீழ் ரூ.1,140 கோடி வழங்கப்பட்டுள்ளது என அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.