புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு
தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் 100-ஆவது தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி ஆணைகள் வழங்கும் விழா ராணி மேரி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். பின்னா் நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது: மக்களின் வாழ்க்கைத்தரம் பொருளாதார ரீதியாக மேம்பட வேலைவாய்ப்புகள் மிக முக்கியம். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் முன்மாதிரி முயற்சியாக தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்களை தொடா்ந்து நடத்தி அவற்றில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இது மிகவும் பாராட்டுக்குரிய செயல். இதன் மூலம் 2 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய பெருமை தொழிலாளா் நலத் துறையைச் சேரும். இந்த புதிய வேலைவாய்ப்புகள் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கூறியதாவது: இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தின் வழியாக இளைஞா்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 18 லட்சம் மாணவா்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா் என்றாா். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையா் எ.சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜெகடே, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநா் மு.வே.செந்தில்குமாா், ராணி மேரி கல்லூரி முதல்வா் பா. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.