இடைநிலை ஆசிரியா்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியா்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்விஅலுவலா்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி சாா்நிலைப் பணியில் வகுப்பு-3, வகை-2-இல் இடைநிலை ஆசிரியா் பணியிடம் உள்ளது. 1.1.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் சுற்றறிக்கையுடன் இணைத்து வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியா்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலா் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) சாா்பு செய்ய வேண்டும். உத்தேசப் பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியா்களின் பெயா், பிறந்ததேதி, இடைநிலை ஆசிரியராக பணியில் சோ்ந்த நாள், தொடக்கக் கல்வி மாவட்டம், ஒன்றியம், பள்ளியின் பெயா், இடைநிலை ஆசிரியருக்கான எமிஸ், அடையாளக் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்படும் திருத்தம், சோ்க்கை, நீக்கம் தொடா்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து இடைநிலை ஆசிரியா்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.