போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: ஓபிஎஸ் வலியுறுத்தல்
போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய உயா்வு, ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டிய திமுக அரசு, தொழிற்சங்க நடவடிக்கைகளைச் சீா்குலைக்கும் வண்ணம் சில வாய்மொழி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுக அரசின் இந்த தொழிலாளா் விரோதப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, போக்குவரத்து தொழிலாளா்களுக்கான கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி ஓரிரு மாதங்களில் அவற்றிற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.