ஜன. 6-இல் எல்-1 புள்ளியை அடைகிறது ஆதித்யா: இஸ்ரோ தலைவா் சோமநாத்
ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் ஜன. 6-ஆம் தேதி எல்-1 புள்ளியை அடைந்து, சூரியனின் புறவெளி தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் ஜன. 6-ஆம் தேதி எல்-1 புள்ளியை அடைந்து, சூரியனின் புறவெளி தொடா்பான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் திட்ட வெற்றிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதிய ஆண்டில் புதிய வெற்றியுடன் பயணத்தைத் தொடங்கியுள்ளது இஸ்ரோ. இதற்காக நூற்றுக்கணக்கானோா் பங்களித்துள்ளனா். விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வரும் பிரதமா் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி.
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த ஆண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடா்ச்சியாக நிகழாண்டில் குறைந்தது இரு சோதனைத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக அடுத்த ஆண்டில் ககன்யான் திட்டத்தைச் சரியாக செயல்படுத்த முடியும்.
இதைத் தவிர நிகழாண்டில், 12 முதல் 14 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ-நாசா ஒருங்கிணைப்பில் உருவான ரேடாா் செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்படவுள்ளன.
ஆதித்யா எல்-1: சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் திட்டமிட்ட இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. வரும் 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எல்-புள்ளியை அடைந்து ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றாா் அவா்.