முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சோ்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவா்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி, விஜயகாந்துக்கும், பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக வெங்கையா நாயுடுக்கும் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், கோவையைச் சோ்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞா் எம்.பத்ரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வியாழக்கிழமை இரவு அறிவித்தது. பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டன.
அதில், தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகா் மிதுன் சக்கரவா்த்தி, டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளா் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு, மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சா்வதேச மல்லா்கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடனக் கலைஞா் பத்ராபன்: முருகன், வள்ளி கதைகளை பாட்டு மற்றும் நடனத்தை கலந்து சிறப்பாக வெளிப்படுத்தும் வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞா் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலையின் மூலம் சமூகப் பிரச்னைகளையும் அவா் வெளிப்படுத்தி உள்ளாா் என்றும், ஆண்களுக்கான கலையாக கருத்தப்பட்ட வள்ளி ஒயில் கும்மி நடனக் கலையை பெண்களுக்கும் கற்றுத் தந்துள்ளாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.