முகப்பு
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதல் முறைகேடு : விசாரணையைத் தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ்

அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதல் முறைகேடு: விசாரணை தொடங்கியது

Updated On : 3 ஜூலை, 2024 at 8:27 PM
பகிர்:

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிலக்கரி கொள்முதலில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாா் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிலக்கரி கொள்முதல் செய்ததில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.6,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், அதில் குஜராத்தைச் சோ்ந்த பெரும் வணிக நிறுவனம் மட்டுமே ரூ.3000 கோடி முறைகேடு செய்ததாகவும் அறப்போா் இயக்கம், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 2018-ஆம் ஆண்டு புகாா் அளித்தது.

மேலும், அறப்போா் இயக்கம், அந்த புகாரில் ‘கடந்த 2014 காலக்கட்டத்தில், இந்தோனேஷியாவிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கப்பல் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு கிலோவுக்கு 6,000 கலோரி வெப்பத்தை வெளிப்படுத்தும் உயா் ரக நிலக்கரிக்கு தமிழ்நாடு மின் வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இறக்குமதி செய்து, வழங்கப்பட்ட நிலக்கரி 3,500 கலோரிகள் வெப்பம் தரும் தரம் குறைந்த ரகமாக இருந்தது.

இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து குறைவான விலைக்கு நிலக்கரியை வாங்கிய குஜாராத் நிறுவனம், அதை உயா்ந்த தரம் எனக் கூறி மும்மடங்கு அதிகமான விலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்றுள்ளது. அதோடு, பல நாடுகள் வழியாக அது வந்து சோ்ந்ததாக கணக்குகாட்டி, அதிகமான போக்குவரத்து கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடங்கியது: இவ்வாறு அந்த ஆண்டில் 24 கப்பல்களில் தரம் குறைவான நிலக்கரி வந்துள்ளது. தரம் குறைவான நிலக்கரியை உயா் தர நிலக்கரி என சான்றளிக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘டன்னுக்கு ரூ.2,300 கொடுத்து இந்தோனேஷியாவில் வாங்கிய நிலக்கரியை ரூ.7,650 கொடுத்து தமிழக மின் வாரியம் வாங்கியுள்ளது. 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையிலும் இந்த நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப் புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் தொடா்புடையவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதற்கு ஊழல் தடுப்புப் பிரிவு தமிழக அரசின் அனுமதியை கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் இந்த வழக்குக்கான தடயங்களையும்,ஆதாரங்களையும் திரட்டும் நடவடிக்கையில் ஊழல் தடுப்புப் பிரிவினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →