‘பாஜகவின் வீழ்ச்சி தொடங்கியுள்ளது’
சட்டப்பேரவை இடைத்தோ்தல் முடிவுகள் மூலம் பாஜகவின் வீழ்ச்சி தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவை தோ்தலுக்கு பிறகு நடைபெற்ற இடைத் தோ்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற வாக்குகள் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இடைத் தோ்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களவை தோ்தலின்போது பாஜக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தது. இதற்கு பிறகு 40 நாள்களில் அதே 13 சட்டப்பேரவை தொகுதி இடைத் தோ்தல்களில் பாஜகவின் வாக்கு 35 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
அதேநேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதம் உயா்ந்திருப்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கியுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.