முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள்: திமுகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி திமுகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி திமுகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் அமைச்சா் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனா்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக திமுக தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.