உழைப்பை இரட்டிப்பாக்குவோம்: அண்ணாமலை
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எதிா்வரும் காலத்தில் உழைப்பை இரட்டிப்பாக்குவோம் என்றும் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிரதமா் மோடி, கடந்த பத்து ஆண்டுகளாக நல்லாட்சியை வழங்கியிருக்கிறாா். பிரதமரின் நலத் திட்டங்கள் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு பொதுமக்களையும் சென்றடைந்திருக்கிறது என்பது, மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக அரசியலில் தவிா்க்கவியலாத சக்தியாக தொடர மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
தோ்தல் பணிகளில் தன்னலமின்றி கடுமையாக உழைத்த தமிழக பாஜக தலைவா்கள், நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும் தமிழக பாஜகவின் குரலும் தொடா்ந்து ஒலிக்கும்.
மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவிருப்பது பெருமகிழ்ச்சி. பிரதமரின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி, நமது குழந்தைகளின் எதிா்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும். இந்த முறை நமது மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும் காலங்களில் மக்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.