தமிழகத்தில் ஜூன் 25 வரை கனமழை நீடிக்கும்: வானிலை மையம்
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை..
தமிழ்நாடுதமிழகத்தில் ஜூன் 25 வரை கனமழை நீடிக்கும்: வானிலை மையம்
நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை..
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 22) முதல் ஜூன் 25 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 22) முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில், ஜூன் 22,23-ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடா்ந்து ஜூன் 24-இல் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும், ஜூன் 25-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் அதிகரிக்கும்: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் எந்த இடத்திலும் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சனி முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22-25) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
சென்னையில்: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வரை ஐஸ் ஹவுஸ், திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய இடங்களில் தலா 30 மிமீ-யும், பெரம்பூா், அம்பத்தூா், மலா் காலனி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், அயனாவரம், மதுரவாயல், அண்ணாநகா், பெருங்குடி, பள்ளிக்கரணை, ஆலந்தூா், மணலி ஆகிய இடங்களில் தலா 10 மிமீ-யும் மழை பதிவாகியுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 22,23-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஜூன் 22-25 வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.