தமிழக ஆளுநரை நாளை சந்தித்து மனு: எடப்பாடி பழனிசாமி
மக்கள் உணர்வுகளை அடக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழகத்தில் கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து, கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேலும் அவர் பேசியது:
கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளான நிலையில் தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள், கள்ளச்சாராய விற்பனையால் அப்பாவி மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகாரிகளை ஆட்சியாளர்கள் ஆட்டிப் படைக்கின்றனர்.
இந்த பகுதியின் முக்கிய புள்ளி துணையோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. ஆட்சியாளர்கள் அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏழை, எளிய . தாழ்த்தப்பட்ட மக்களை இந்த அரசு துச்சமென நினைக்கிறது. அதனால்தான் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்க இந்த அரசு நினைக்கிறது. மக்களின் உணர்வுகளை , கொந்தளிப்பை அரசால் தடை செய்ய முடியாது.
காவல் துறை விசாரணையால், ஒரு நபர் ஆணையத்தால் எந்த நீதியும் கிடைக்காது. சிபிஐ விசாரணை நடத்தினால் தான் நியாயம் கிடைக்கும். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரை ஏற்கெனவே சந்தித்து இருந்தோம். தற்போது கள்ளக்குறிச்சியில் 58 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் தமிழக ஆளுநரை நாளை (செவ்வாய்க் கிழமை) சந்தித்து முறையிட உள்ளோம் என்றார் பழனிசாமி.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் இரா. குமரகுரு தலைமை வகித்தார். செந்தில்குமார் எம்எல்ஏ , முன்னாள் அமைச்சர் ப . மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.