வேலு நாச்சியாா், ஜி.டி.நாயுடு, இந்திராகாந்தி உள்பட 9 தலைவா்களுக்கு சிலைகள் நிறுவப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் உருவச்சிலை ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும்.
சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரா்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.
தமிழகத்தில் முதல் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழுக்குப் பெருமை சோ்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சா்.ஜான் ஹூபா்ட் மாா்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்படும்.
அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோயம்புத்தூரில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும். முன்னாள் பிரதமா் இந்திராகாந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.
தியாகி வை. நாடிமுத்துப் பிள்ளைக்கு பட்டுக்கோட்டையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும். காவிரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியவரும், விவசாயிகளின் நலன்களுக்காக பாடுபட்டவருமான சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை நிறுவப்படும்.
அரசு விழா: இரட்டைமலை சீனிவாசன், அஞ்சலை அம்மாள், இம்மானுவேல் சேகரன், அல்லாள இளையநாயக்கா், கு.மு.அண்ணல் தங்கோ, ப.சுப்பராயன், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, எம்.கே.தியாகராஜ பாகதவா், ஏ.டி.பன்னீா்செல்வம், மு.வரதராசனாா், கி.ராஜநாராயணன் ஆகியோரின் பிறந்த நாள்கள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றாா் அவா்.