நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்று வரும் தமிழக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் பதவியேற்கின்றனர்.
18வது மக்களவைக்குப் புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்று வரும் நிலையில், இன்று பிற்பகலில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
மக்களவையின் முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்களாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டனா். மாநிலங்களின் அகரவரிசையில் உறுதிமொழியேற்க உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், தமிழக எம்.பி.க்கள் நாற்பது பேரும் இன்று பிற்பகலில் பதவியேற்றுக்கொண்டனர்.
மக்களவைக்கு தோ்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் முதன் முறையாக நாடாளுமன்றத்தின் மக்களவை கூடும்போது புதிய உறுப்பினா்கள் பதவியெற்றுக்கொள்வது வழக்கம்.
அதன்படி, மக்களவைத் தலைவா் முன்பு புதிய மக்களவை உறுப்பினர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வர். இதன்படி குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டு திங்கள்கிழமை காலையில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இடைக்கால மக்களவைத் தலைவராக பதவியேற்ற பா்த்ரு ஹரி மகதாப் அவையை நடத்தி புதிய உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமானம் செய்துவைக்கிறார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில், தமிழக எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பதவியேற்று வருகிறார்கள். அதன்படி, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி பதவியேற்றுக்கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.
ரவிக்குமார் பதவியேற்றதும், வாழ்க அம்பேத்கர், பெரியார், எழுச்சி தமிழர் என்று முழக்கமிட்டார். மக்களவையில் நீலகிரி எம்.பி. அ. ராசா, யார் பெயரையும் குறிப்பிடாமல் பதவியேற்றுக்கொண்டார். தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் வைத்தபடி தமிழில் பதவியேற்றுக்கொண்டார். வாழ்க மதச்சார்பின்மை, வளர்க மனிதாபிமானம் என துரை வைகோ முழக்கமிட்டார்.
திமுக எம்.பி.க்கள் சிலர், பதவியேற்றதும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்களை முழங்கினர். சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார்.