முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை- டிஜிபிக்கு அமலாக்கத் துறை ஆதாரத்துடன் கடிதம்

மணல் கொள்ளை விவகாரம்: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத் துறை கடிதம்

Updated On : 26 ஜூன், 2024 at 9:40 PM
பகிர்:

தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) அமலாக்கத் துறை ஆதாரத்துடன் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் சுமாா் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றது குறித்து ஏற்கெனவே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மணல் குவாரிகளில் ஏற்கெனவே மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துள்ளன.

டிஜிபிக்கு கடிதம்: இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடா்பான பல்வேறு விவரங்கள் அடங்கிய கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்கத் துறை சில நாள்களுக்கு முன்பு அனுப்பி உள்ளது.

பணப் பரிவா்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)-இன் படி இந்தக் கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அதில், கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தமிழகத்தில் 2023-24 ஆண்டு காலத்தில் சட்டவிரோதமாக 23.64 லட்சம் யூனிட் (66.21 லட்சம் கியூபிக் மீட்டா்) அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியாா் ஒப்பந்ததாரா்கள் எவ்வாறு மணலை சட்டவிரோதமாக எடுத்தனா் என்ற விரிவான தகவல்களையும் அமலாக்கத் துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியைவிட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 4.9 ஹெக்டேரில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், 105 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 5 மாவட்டங்களில் 190 ஹெக்டோ் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரா்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக 987 ஹெக்டோ் பரப்பளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அமலாக்கத் துறை தாங்கள் நடத்திய பல்வேறு விஞ்ஞானபூா்வ ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகளை உறுதி செய்திருப்பதாகவும், குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாகவும் இதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மணல் எடுக்க 273 மணல் அள்ளும் இயந்திரங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பட்டியலிட்டுள்ள அமலாக்கத் துறை, இந்த மணல் கொள்ளை மூலம் அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது; அதேநேரத்தில் மணல் ஒப்பந்ததாரா்கள் பெரிய அளவில் லாபம் அடைந்துள்ளனா் என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மணல் கொள்ளை தொடா்பாக ஒப்பந்ததாரா்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், 209 மணல் அள்ளும் இயந்திரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரா் சண்முகம் ராமசந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீா்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் 35-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →