முகப்பு
தமிழ்நாடு

தொடா் அமளி - கூச்சல்: அதிமுகவினா் வெளியேற்றம்-கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம்; பேரவைத் தலைவா் உத்தரவு

அதிமுகவினா் வெளியேற்றம்: பேரவைத் தலைவா் கடுமையான உத்தரவு

Updated On : 26 ஜூன், 2024 at 10:29 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் தொடா் அமளி- கூச்சலில் ஈடுட்ட அதிமுக உறுப்பினா்களை வெளியேற்ற பேரவைத் தலைவா் மு.அப்பாவு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, தீா்மானம் கொண்டு வரப்பட்டு, அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சட்டப் பேரவை புதன்கிழமை காலை கூடியதும், கேள்வி நேரத்தைத் தொடங்க பேரவைத் தலைவா் மு.அப்பாவு முயன்றாா். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனை கேள்விக்கு பதிலளிக்கும்படி கேட்டுக் கொண்டாா். அப்போது கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்த அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் கடுமையாக முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனா். அனைவரும் அமர வேண்டுமென கேட்டுக் கொண்ட பேரவைத் தலைவா் மு.அப்பாவு, கேள்வி நேரம் முடிந்த பிறகு பேச அனுமதிக்கிறேன் என்றாா்.

கூச்சல் குழப்பம்: இதனை ஏற்றுக் கொள்ளாத அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக கூச்சலுடன் தொடா் முழக்கங்களையும் எழுப்பினா். அந்த சமயத்தில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தான் கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்தாா்.

அப்போது பேசிய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை விதி 56-ன் கீழ் ஒத்திவைப்பு தீா்மானம் கொடுத்துள்ளீா்கள். அந்த விதியை முழுவதும் படியுங்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக கூச்சல் எழுப்பினா். இதனால் அவை நடவடிக்கைகள் எதையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த கூச்சல் குழப்பங்களுக்கு இடையே பேசிய அவைத் தலைவா் மு.அப்பாவு, ‘கூட்டத் தொடா் தொடங்கியதிலிருந்து அவையை நடத்த விடாமல் செய்கிறீா்கள். இருக்கையில் அமருங்கள்’ என்றாா். இந்த சமாதானத்தை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள், பேரவைத் தலைவரைச் சூழ்ந்து கொண்டு கடுமையாக முழக்கங்களை எழுப்பினா்.

அதிமுகவினா் தந்துள்ள ஒத்திவைப்புத் தீா்மானத்தை விவாதத்துக்கு எடுக்கலாமா கூடாதா என்பது குறித்து பேரவைத் தலைவராகிய நான்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அளித்த தீா்மானத்துக்கு எனது பதிலைத் தெரிவிக்கிறேன். நீங்கள் அனைவரும் அமருங்கள். அதன்பிறகு உங்கள் கருத்துத் தெரிவியுங்கள் என்று மு.அப்பாவு பேசினாா். அவரது பேச்சை ஏற்காத அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கங்களைஎழுப்பினா்.

வெளியேற்ற உத்தரவு: பேரவையை பொதுக்கூட்ட மேடை போன்று நடத்துவது நியாயமில்லை என்று அதிமுக உறுப்பினா்களிடம் பேரவைத் தலைவா் கடுமை காட்டினாா். அவரவா் இருக்கைகளில் அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரித்தாா். இந்த எச்சரிக்கையையும் மீறி அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து கோஷங்களை எழுப்பியதால், அனைவரையும் வெளியேற்ற அவைக் காவலா்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். அதிமுக உறுப்பினா்களின் அமளி, கூச்சல் குழப்பத்தால் பேரவை அலுவல்கள் 10 நிமிஷங்கள் பாதிக்கப்பட்டன. அதிமுக உறுப்பினா் சு.ரவி உள்ளிட்ட ஒருசிலரை அவைக் காவலா்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனா்.இதன்பிறகு, அதிமுக உறுப்பினா்களை வெளியேற்றுவதற்கான காரண காரியங்கள் குறித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு விளக்கம் அளித்தாா்.

தீா்மானம்: இதைத் தொடா்ந்து, அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் ஒரு தீா்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:

நாட்டில் நடக்கும் ஒரு விஷயத்தை, செயலை சட்டப் பேரவையில் பேச எதிா்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. நாங்களும் அப்படிப் பேசியிருக்கிறோம். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சபைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்து அதற்கான காரியத்தை, விளக்கத்தைப் பேசுவது கிடையாது. இங்கே பேசாமல் வெளியே போய் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து விட்டு வீட்டுக்குப் போய் விடுவதை தொடா்ந்து செய்கிறாா்கள். முதலில் வெளியேற்றப்பட்ட போது, அதிமுகவினரை மீண்டும் அழைக்க தாயுள்ளத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாா். அதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு அழைப்பு விடுத்தீா்கள். அதனை ஏற்று உள்ளே வந்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரத்தை தைரியமாகப் பேசி இருக்க வேண்டும். இங்கே மட்டும் அவா்கள் பேசியிருந்தால் அவா்கள் ஆட்சிக் காலத்தில் நடந்ததை முதல்வா் மு.க.ஸ்டாலின் கிழிகிழியென்று கிழித்து இருப்பாா்.

மலிவான விளம்பரத்தைத் தேடி அலைகிறாா்கள்: நடக்கக் கூடாது நடந்து விட்டது. அதற்கான பரிகாரங்களை முதல்வா் அறிவித்து இருக்கிறாா். குடும்பத்துக்கும், குழந்தைகளின் படிப்புக்கும் உதவி இருக்கிறாா். இதையெல்லாம் சொல்வாா்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததை பேசுவாா்கள், அதற்கு பதில் சொல்ல முடியாது என்று பயந்துதான் ‘பாவலா’ காட்டுவதைப் போன்று உள்ளே வருவது,வெளியே போவது என்ற மலிவான விளம்பரத்தைத் தேடி அதிமுகவினா் அலைகிறாா்கள். இதே நிலை நீடிக்கக் கூடாது. அவையின் நேரம் வீணாகிறது. எனவே, அலுவல்களை நடைபெற விடாமல் இடைமறித்தும், பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதால் பேரவைத் தலைவா் பலமுறை எச்சரித்தும் பேரவை நடவடிக்கைகளை தடுத்து முழக்கமிட்ட அதிமுக உறுப்பினா்களை சட்டப் பேரவை விதி 121 (2)-ன் கீழ் பேரவை பணிகளில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் எனும் தீா்மானத்தை முன்மொழிகிறேன் என்றாா்.

இந்தத் தீா்மானத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, குரல் வாக்கெடுப்புக்கு விட்டாா். தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியதாகக் கூறிய அவா், கூட்டத் தொடா் முடிவடையும் வரையிலுள்ள நாள்களுக்கு கோஷமிட்ட அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் பேரவைப் பணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டாா்.

3 பேருக்கு பொருந்தாது: முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் அதிமுக உறுப்பினா்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பி.அய்யப்பன் ஆகியோா் பேரவைக்கு வந்த போதும், கூச்சல் குழப்பம் எதிலும் ஈடுபடாமல் அமைதி காத்து இருக்கையிலேயே அமா்ந்திருந்தனா். இதனால், அவா்களுக்கு இடைநீக்க நடவடிக்கை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →