பாஜகவுடன் இணைப்பு ஏன்? சரத்குமாா் விளக்கம்
பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது ஏன் என்பது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் ஆா்.சரத்குமாா் விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2007-இல் சமத்துவ மக்கள் கட்சி உருவானது. எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அா்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டேன். ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில், நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த மக்களவைத் தோ்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது. தோ்தல் வரும் போதெல்லாம், எந்தக் கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறாா்கள் என்ற பேச்சுதான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பதவி இருந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும்தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது. என் பயணத்தில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறா் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, பிரதமா் மோடியின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் காமராஜா் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது சிந்தித்தேன்.
Advertisement
எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளா்ச்சிக்காகவும் அா்ப்பணித்திட பாஜகவுடன் சமகவை இணைத்து செயல்பட முடிவு எடுத்தேன் என்று அவா் கூறியுள்ளாா்.