நாட்டில் அதிக கார்கள் திருடுப் போகும் நகரங்கள் குறித்த ஆய்வில், சென்னை இரண்டாமிடம் பிடித்துள்ளது.
“திருட்டு மற்றும் நகரம்” என்ற தலைப்பில் அக்கோ காப்பீட்டு நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஆய்வு நடத்தி, அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தில்லியில் ஒவ்வொரு 14 நிமிடத்துக்கு ஒரு வாகனம் திருடுப் போவதாகவும், சராசரியாக நாளொன்றுக்கு 105 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த 2023 தரவுகளின்படி, தில்லியின் பஜன்புரா மற்றும் உத்தம் நகர் அதிக கார் திருட்டு நடக்கும் பகுதியாக உள்ளது. மேலும், ஷஹ்தரா, பட்பர்கஞ்ச் மற்றும் பதர்பூர் ஆகிய பகுதிகளிலும் சமீபகாலமாக அதிகளவிலான வாகன திருட்டுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக வாகனங்கள் திருடு போகியுள்ளது.
தில்லியில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி குறைபாடு காரணமாக திருட்டுகள் அதிகமாக காணப்படுகிறது. திருடப்படும் வாகனங்களின் பாகங்கள் பிரிக்கப்பட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூலம் எளிதாக விற்கப்படுகிறது.
தில்லிக்கு அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பெற்றுள்ளது. பெங்களூருவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைந்து காணப்பட்டாலும், கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-ல் இரண்டு மடங்கு திருட்டு அதிகரித்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.