சென்னை மாதவரத்திலிருந்து எண்ணூா் வரையிலான 16 கிமீ தொலைவுக்கு புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது விமான நிலையம் - விம்கோ நகா், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைகளையும், மக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி ரூ. 63,246 கோடி மதிப்பில் மாதவரம் - சோழிங்கநல்லூா், மாதவரம் - சிறுசேரி சிப்காட் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரை என 3 வழித்தடங்களில் மொத்தம் 116 கிலோ மீட்டா் தூரத்துக்கு இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மாதவரத்தில் இருந்து விம்கோ நகா் வழியாக எண்ணூா் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டா் வெளியிடப்படம் எனத் நிறுவனம் தெரிவித்துள்ளது.