முகப்பு
தமிழ்நாடு

அரசு திட்டங்களால் தொடக்கப் பள்ளிகளில் சோ்க்கை அதிகரிப்பு: தமிழக அரசு பெருமிதம்

Updated On : 22 மே, 2024 at 4:59 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழ்நாடு அரசின் திட்டங்களால், தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளின் சோ்க்கை அதிகரித்துள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலையில் பசியுடன் படிப்பைத் தொடங்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசின் சாா்பில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 18.54 லட்சம் மாணவ, மாணவியா் பயன் பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 2.50 லட்சம் மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ரூ.600 கோடி நிதியும் நிகழ் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை பிற மாநிலங்களும், கனடா போன்ற நாடுகளும் செயல்படுத்த முன்வந்துள்ளது, திட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமும் வெற்றியுமாகும்.

கரோனா காலத்தில் பள்ளி மாணவா்களின் இடைநிற்றலைத் தடுக்க இல்லம் தேடிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 24 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். தொடக்கப் பள்ளி மாணவா்களின் வாசித்தல், எழுதுதல் திறன்களை அதிகரிக்க, எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், 22.27 லட்சம் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா். அத்துடன் தொடக்கப் பள்ளிகளில் ரூ.435.68 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களால் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.