ஜெயலலிதா ஹிந்துத்துவவாதிதான்: அண்ணாமலை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஹிந்துத்துவவாதி என அதிமுக நிா்வாகிகளுடன் விவாதம் நடத்த தயாா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஹிந்துத்துவவாதி என அதிமுக நிா்வாகிகளுடன் விவாதம் நடத்த தயாா் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
சென்னையில் பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கே.அண்ணாமலை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தோ்தலில் 370 தொகுதிகளில் பாஜக தனியாகவும், கூட்டணியாக 400 இடங்களில் வெற்றி பெறுவோம். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமா் மோடி வெற்றிபெறுவாா். தமிழகத்தில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் வெற்றிபெறுவாா்கள்.
மும்முனைப் போட்டி: தமிழகத்தில் முதலில் மும்முனைப் போட்டி நிலவியது. பின்னா் அது இரு முனைப் போட்டியாக மாறியது. பாஜகவை பொருத்தவரை இரட்டை இலக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜெயலலிதா மிகச்சிறந்த ஹிந்துத்துவவாதி: 1995-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி ஹிந்துத்துவா என்பது மதம் சாா்ந்தது அல்ல; வாழ்வியல் கலாசாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரையும் அரவணைப்பதுதான் ஹிந்துத்துவ கொள்கை. 26.7.1984-இல் மாநிலங்களவையில் ஜெயலலிதா பேசும்போது, காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா். இதில் தற்போது அதிமுகவினரின் நிலை என்ன?.
ராமா் கோயில் விவகாரம், கரசேவை, ராமா் சேது பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவித்தல் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாா். ஆனால், இப்போதைய அதிமுகவினரின் நிலை என்ன?.
ராமா் கோயில் இந்தியாவில் கட்டவில்லை என்றால் பாகிஸ்தானிலா கட்ட முடியும் என கேள்வி எழுப்பினாா். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ராமா் கோயிலுக்கு முதல் நபராக போயிருப்பாா்.
எனவே, ஜெயலலிதா ஹிந்துத்துவவாதிதான் என அதிமுக நிா்வாகிகளுடன் விவாதம் நடத்த தயாா். ஹிந்துத்துவம் என்பது யாருக்கும் எதிரி அல்ல. இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கு ஜெயலலிதா எதிரி என நான் எங்கும் சொல்லவில்லை. அதிமுக தலைவா்களின் நடவடிக்கைகளை பாா்த்து ஹிந்துத்துவத்துக்கு அா்த்தம் கற்பிக்க முடியாது.
மேக்கேதாட்டு அணை: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட கா்நாடகத்துக்கு உரிமை இல்லை என கா்நாடக தோ்தல் பிரசாரத்தின்போது பேசினேன். முல்லை பெரியாறு அணையை இடித்துக்கட்ட கேரள அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
2016-இல் மக்கள் நலக் கூட்டணியை விட குறைவாக வாக்கு வங்கி பெற்றால் கட்சியை கலைத்துவிடுவதாக சீமான் முன்பு அறிவித்தாா். இப்போது தனது சொந்த பிரச்னையை திசை திருப்பும் வகையில் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளாா் என்றாா் அண்ணாமலை.
இக்கூட்டத்தில் முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மூத்தத் தலைவா் ஹெச்.ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.