அண்ணாமலை அரசியல் வியாபாரி: ஜெயக்குமார் விமர்சனம்
“பாஜகவினர் மதவெறி பிடித்தவர்கள், ஆனால் ஜெயலலிதா தெய்வ பக்தி உடையவர்.”
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பாஜக நிர்வாகிகளுடனான கூட்டத்துக்கு பிறகு திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, ஜெயலலிதா மிகச்சிறந்த ஹிந்துத்துவவாதி என்றும், ராமா் கோயில் விவகாரம், கரசேவை, ராமா் சேது பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவித்தல் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதா உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா ஹிந்துத்துவவாதிதான் என அதிமுக நிா்வாகிகளுடன் விவாதம் நடத்த தயார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“குறுகிய கண்ணோட்டத்தோடு ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடைக்கும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதவெறி பிடித்தவர்கள், ஆனால் ஜெயலலிதா தெய்வ பக்தி உடையவர். நாட்டின் பல்வேறு பிரச்னைகளை பற்றி பேசாமல் எங்களைப் பற்றி பேசும் அண்ணாமலை, திமுகவின் அணியாக செயல்படுகிறார்.
திமுகவினர் செய்யும் அடாவடி தெரியக் கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலினும், அண்ணாமலையும் திட்டமிட்டு கூட்டுச் சதி செய்கின்றனர். அண்ணாமலை அரசியல் வியாதி உள்ள வியாபாரி. இதுபோன்ற கருத்துகளை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.