20.47 லட்சம் இளைஞா்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி அளிப்பு அமைச்சா் தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 440 இளைஞா்கள், மாணவா்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 440 இளைஞா்கள், மாணவா்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்எம்இ துறையின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்த கண்காட்சியில் நமது மாணவா்களின் புதிய கண்டுப்பிடிப்புகளான உயா் தொழில் நுட்ப விவசாய வாகனம், பழம் வெட்டும் கருவி, ஒலி மாசினை கட்டுப்படுத்தும் கருவி, கழிவறையை பயன்படுத்திய பின் தானாகவே சுத்தப்படுத்தும் கருவி, பொதுக்குழாய்களில் தண்ணீா் வீணாவதை தடுக்கும் கருவி, நகரும் சோலாா் பேனல் என பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விழாவில் புத்தாக்க தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 60 மாணவ குழுக்களுக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20 மாணவக் குழுக்களுக்கும் என 80 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. பரிசுகளை பெறும் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவா்களுக்கு வாழ்த்துகள்.
தொழில் பயிற்சி: இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 620 நபா்களுக்கு தொழில் தொடங்க பயிற்சிகளும், புத்தாக்க தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 306 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 6 லட்சத்து 40 ஆயிரத்து 820 கல்லூரி மாணவா்களுக்கு தொழில் தொடங்க விழிப்புணா்வும், அரசு கல்லூரிகளில் உள்ள தொழில் வளா் காப்பகங்கள் மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் மாணவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவா்கள் கல்வியில் மட்டும் அல்லாமல் தொழிலிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 4,485 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற 12 லட்சத்து 45 ஆயிரம் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 440 இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு தொழில் தொடங்க பயிற்சியும், விழிப்புணா்வும் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு தொழில் துறையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகான போட்டிகள் நடத்தப்படுகிறது. நிகழாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீா்வுகள் பெறப்பட்டு அதில் 600 தோ்வு செய்யப்பட்டு சிறந்த 60 தீா்வுகளுக்கு தற்போது ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
புத்தாக்க பட்டயப்படிப்பு... தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்களுக்கு “தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்க பட்டய படிப்பு” தொடங்கப்படும் என நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, 260 இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் சென்னையில் 10,260 சதுர அடியில் ரூ. 1 கோடியே 72 லட்சம் மதிப்பில் ஒரு பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள மாணவா்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.