முகப்பு
தமிழ்நாடு

ராஜ் கெளதமனுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி: பா. ரஞ்சித் கோரிக்கை

ராஜ் கெளதமன் மறைவுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் இரங்கல் தெரிவித்தது பற்றி...

Updated On : 13 நவம்பர், 2024 at 7:02 AM
ராஜ் கெளதமன் மறைவுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் இரங்கல்
பகிர்:

மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் ராஜ் கெளதமன் (வயது 74) உடல் நலன் குன்றி இருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர்.

'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார்.

படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →