தெலுங்கு மக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிராமணா் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆா். எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ. 3-ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தியது. இதில், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவா் மீது எழும்பூா் போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் கஸ்தூரியை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், திங்கள்கிழமை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கஸ்தூரி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், கஸ்தூரி சாா்பில் வழக்குரைஞா் டி.ஆா். பிரபாகரன் எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவா் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீஸாா் அழைப்பாணை ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்துவிடும். எனவே, எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு எழும்பூா் 14-ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரருக்கு சிறப்புக் குழந்தை உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டாா். அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.