சென்னை: கடந்த 2018 ஆம் ஆண்டு மூன்று வயது குழந்தையை இரண்டு பெண்கள் கடத்திச் சென்ற வழக்கு அப்போது தலைப்புச் செய்தியாகியிருந்த நிலையில், திடீர் திருப்பமாக, வழக்கில், குழந்தையை பெற்ற தாயே பிறழ் சாட்சியாக மாறி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்புவிக்கக் காரணமாகிவிட்டது.
காவல்துறையினர் நடத்திய, விசாரணையின் போது கடத்தப்பட்ட குழந்தையின் தாய், பிறழ் சாட்சியாக மாறியதால், சென்னை காவல்துறையால் கடுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும், வழக்கிலிருந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பில் உள்ள மழலையர் பள்ளியில் இருந்த 3 வயது சிறுவனை, குட்டியம்மா (38) மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோர், பள்ளி ஆசிரியரிடம் உறவினர் போல காட்டிக் கொண்டு பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பிறகு அந்த குழந்தையை ஜோதி (50) என்பவருக்கு ரூ.50,000க்கு விற்க திட்டமிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து முக்கியக் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது நகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், காவல்துறையினரை வெகுவாகப் பாராட்டினார்.
பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள்கடத்தல் மற்றும் மனிதர்களை விற்பனை செய்வது ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போதுதான் குழந்தையின் தாயும், புகார்தாரரான துர்காதேவியும் பிறழ் சாட்சிகளாக மாறினர். குழந்தையை, குற்றவாளிகளுடன் அனுப்புமாறு ஆசிரியர்களுக்கு தாங்கள்தான் அனுமதி கொடுத்ததாகக் கூறியதால், ஆள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
மேலும், வழக்கில், ஆறு அரசுத் தரப்பு சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறினர், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு புகார்தாரரின் குடும்பத்தினரை நன்கு தெரியும், அவர்கள் தங்கள் வீட்டைக் கட்டும் பணியின்போது கூலி வேலை செய்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்தது. வழக்கை விசாரித்து வந்த அமர்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர்தான், பள்ளி ஆசிரியருக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை ஆள் கடத்தல் என்று கூற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குழந்தையுடன் பெண்கள் வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் அடங்கிய சிடியை விசாரணை அதிகாரி தொலைத்துவிட்டார். இது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மற்றொரு முக்கிய காரணமாக மாறியது.
மின்னணு ஆதாரங்களை சேகரித்த விசாரணை அதிகாரியின் சோம்பேறித்தனம், பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் முட்டாள்தனம் ஆகியவையே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்குக் காரணம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த வழக்கில் காவல்துறையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட மறுத்த நீதிபதி, புகார்தாரரே பிறழ் சாட்சியாக மாறியதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.