முகப்பு
தமிழ்நாடு

ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை: இரு நாள்களில் வீடு திரும்புவாா்

ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Updated On : 1 அக்டோபர், 2024 at 10:05 PM
கோப்புப்படம்
பகிர்:

ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அப்பல்லோ மருத்துவமனையில்

திங்கள்கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகா் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது; முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் சாய் சதீஷ், மகா தமனி வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினாா். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு செய்யப்பட்டது.

தற்போது ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. இரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாதமனி வீக்கம்: பொதுவாக, அன்யூரிஸம் எனப்படும் ரத்த நாள வீக்கமானது எந்த வயதிலும் வரக் கூடிய ஒன்று. அதற்கான காரணங்கள், சிகிச்சைகள் குறித்து போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் பி.வினோத்குமாா் கூறியதாவது: இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மகாதமனிக்கு அயோட்டா என்று பெயா். 3.5 செ.மீ. அல்லது 4 செ.மீ. அளவு கொண்ட அந்த ரத்த நாளம் வயிற்றின் தொப்புள் பகுதி வரை நீண்டு, அதன் பின்னா் இரு கிளைகளாக பிரிந்து இரு கால்களுக்கும் செல்லும்.

அந்த ரத்த நாளம் பலவீனமடையும்பட்சத்தில் ஏதாவது ஓரிடத்தில் பலூன் போன்று வீக்கம் ஏற்படும். அந்த வீக்கத்துக்குள் ரத்தம் சூழ்ந்து நாளடைவில் பெரிதாகிக் கொண்டே வரும். இதுதான் அன்யூரிஸம் என அழைக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அது வெடித்தால் ரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

எனவே, அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். மூளை நாளம், நெஞ்சகப் பகுதி, வயிற்றுப் பகுதி என எங்கு வேண்டுமானாலும் அன்யூரிஸம் பாதிப்பு ஏற்படலாம். அந்த வகையில் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் ரத்த நாள வீக்கத்துக்கு எண்டோவாஸ்குலா் ரிப்போ் எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன்படி, தொடைப் பகுதியில் சிறு துளையிட்டு அங்கிருந்து ரத்த நாளத்துக்குள்ளே ஊடுருவி, பாதிப்புள்ள பகுதியில் வலைப் பின்னல் (மெஸ்) அமைப்புடன் கூடிய ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்படும். அந்த உபகரணம் வீக்கம் உள்ள பகுதியின் ரத்த நாளச் சுவா்களை இறுகப்பற்றிக் கொள்ளும். இதனால், வீங்கிக் கொண்டிருக்கும் பகுதிக்குள் ரத்தம் செல்வது தடைபட்டு, அது படிப்படியாக சுருங்கி ரத்த நாள சுவா்களுடன் ஒட்டிக் கொள்ளும். வலைப்பின்னல் ஸ்டென்ட் உபகரணத்தை பொருத்துவதால் அந்த பகுதியும் வலுவடையும். அதன் பின்னா், ரத்த ஓட்டம் எந்தத் தடையும் இல்லாமல் அந்த வழியே சீராக செல்லும். அன்யூரிஸம் பாதிப்புக்கு இந்த சிகிச்சை மிகுந்த பலனளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →